Skip to main content

கருகும் பயிர்கள், உருகும் உயிர்கள் - விவசாய கருத்தரங்கம்

தென்மேற்கு பருவமழை தான் பொய்த்து போனதென்றால், வடகிழக்கு பருவமழையும் ஏமாற்றி 60 சதவீதத்திற்கு மேல் பற்றாக்குறை ஆனது. தினந்தினம் விவசாயிகள் மரணம் மற்றும் தற்கொலை போன்ற செய்திகளை வலியுடன் கடந்துகொண்டிருக்கிறோம். இந்த நிலையில் இப்பிரச்சனை பற்றிய உண்மையான புரிதலையும் அதற்கான தீர்வுகளையும் மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் வண்ணம் சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில், கடந்த ஜனவரி 22-ம் தேதி “கருகும் பயிர்கள், உருகும் உயிர்கள்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

காவிரி டெல்டா விவசாய சங்கங்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் திரு.ஆறுபாதி கல்யாணம் இந்த கருத்தரங்கில் பங்கேற்று தற்போது விவசாயிகள் சந்தித்து வரும் பிரச்சனைகள் பற்றியும், அதற்கு தனது அனுபவத்தில் அவர் முன்வைக்கும் தீர்வுகள் பற்றியும் தெளிவாக எடுத்துரைத்தார். சட்ட பஞ்சாயத்து இயக்க அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இயக்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என 30க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்றனர். இதுதவிர இந்த கருத்தரங்கம் இணையம் வழியாக இயக்கத்தின் பேஸ்புக் மற்றும் யூடியூப் பக்கங்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதை ஆயிரக்கணக்கானோர் இணையத்தில் கண்டு பயனடைந்தனர்.

கருகும் பயிர்கள், உருகும் உயிர்கள் - காவிரி டெல்டா விவசாய சங்கங்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் திரு.ஆறுபாதி கல்யாணம்

விவசாயத்தில் உள்ள பிரச்சனைகள், தீர்வுகளை 10 தலைப்புகளின் கீழ் திரு.ஆறுபாதி கல்யாணம் அவர்கள் கருத்தரங்கில் எடுத்துரைத்தார். அவைகள் பின்வருமாறு:

  1. நீர் மேலாண்மை

  2. தட்பவெப்பம் சார்ந்த விவசாயம்

  3. விவசாய கடன்கள்

  4. விவசாயிகளுக்கான ஆதார விலை

  5. பயிர்க்காப்பீடு

  6. விவசாயிகள் நலன்

  7. இயற்கையை சிதைக்காத விவசாயம்

  8. இந்திய கால்நடைகளின் பராமரிப்பு

  9. கிராம அளவிலான துள்ளிய கணக்கீடு (Micro-level Statistics)

  10. தற்சார்பு பசுமை கிராமங்கள்

மேலும் விவசாயிகள் பிரச்சனைக்கான தீர்வுகளை சுதந்திர காலத்திலே எடுத்துரைத்த ‘Economy of Permanance’ என்ற ஜே.சி.குமரப்பா எழுதிய புத்தகத்தை அனைவரும் படிக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.

மாலை சரியாக 4 மணிக்கு துவங்கிய இந்நிகழ்வில் முதலில் அறுபாதி கல்யாணம் அவர்கள் தனது கருத்துக்களை எடுத்துவைத்தார். பின்னர், நேரடியாகவும் இணையம் வாயிலாகவும் கவனித்துக் கொண்டிருந்த மக்கள் இப்பிரச்சனை சம்பந்தமாக எழுப்பிய கேள்விகளுக்கு விடையளித்தார். திட்டமிட்டபடி சரியாக 6 மணிக்கு நிகழ்வு முடிவடைந்தது. தொடர்ந்து சட்ட பஞ்சாயத்து இயக்கம் மாதந்தோறும் இம்மாதிரியான கருத்தரங்கங்களை ஏற்பாடு செய்யவுள்ளது என்பதையும் கூறிக்கொள்கிறோம்.

இந்த கருத்தரங்கை இணையத்தில் காண: https://youtu.be/eev4M_j2G9Y

தொகுப்பு: ரங்கபிரசாத்